உடனே விவாதிக்கனும்..!! ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிய மாணிக்கம் தாகூர் எம்.பி.
மக்களவை அலுவல்களை ஒத்திவைத்து பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற இருந்த இந்தக் கூட்டத்தொடரில் வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம் மற்றும் கப்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 8 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதேநேரம் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவராகங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால், வழக்கமான அவை நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இதனிடையே எதிர்கட்சிகளில் தொடர் அமளியால் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் மத்திய அரசு சார்பாக விளக்கமளித்தனர். எதிர்க்கட்சிகளில் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்தனர். அதேநேரம் இதேபோன்று கூடுதல் முக்கியத்துவத்துடன் மத்திய அரசை விவாதிக்க எதிர்கட்சிகள் கையிலெடுத்துள்ள முக்கிய விவகாரம் ‘பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்’ஆகும்.
பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி தொடர்ந்து குரலெழுப்பு வருகின்றன. அமளியில் ஈடுபடுவதோடு, ஒத்திவைப்பு நோட்டீஸையும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் மக்களவை அலுவல்களை ஒத்திவைத்து பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.


