காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு வழக்கில் நில அளவை இயக்குநர் கைது

 
காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு வழக்கில் நில அளவைத்துறை இயக்குநர் கைது

புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு வழக்கில், தேடப்பட்டு வந்த நில அளவைத்துறை இயக்குநர் ரமேசை கும்பகோணத்தில் சிறப்பு அதிரடிபடை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுரடி நிலம், ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது. இந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி புலனாய்வு குழு அமைத்து வழக்கு பதிவு செய்தது. போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணத்தை பதிவு செய்த வில்லியனுார் சார் பதிவாளர் சிவசாமி கடந்த சில மாதம் முன்பு  மாதம் முன்பு கைது செய்யப்பட்டார்.  

இந்த வழக்கில் போலி பத்திரம் பதிவு செய்தபோது பத்திர பதிவுத்துறை இயக்குநராக இருந்த தற்போதைய நில அளவை துறை இயக்குநர் ரமேஷ், புதுச்சேரி தாசில்தாராக பதவி வகித்து தற்போது மீன்வளத்துறை இயக்குநரான பாலாஜி இருவரும், மோசடி வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், நில அளவைத்துறை இயக்குநர் ரமேஷ், மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜி இருவரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த இருவரையும் சிறப்பு அதிரடிபடை போலீசார் தேடி வந்தனர். இதில் சென்னையில் பதுங்கி இருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிபடை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தில் பதுங்கி இருந்த  நில அளவைத்துறை இயக்குநர் ரமேசை, சிறப்பு அதிரடிபடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.