"ஜனநாயகன் தவெக-வை புகழும் படம் இல்லை" - இயக்குனர் ஹெச்.வினோத் விளக்கம்
'ஜனநாயகன்' தவெக-வை மட்டும் புகழ்ந்து பேசும் படமோ, வழக்கமான கமர்ஷியல் என்டர்டெய்னர் படமோ இல்லை என அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.
ஜனநாயகன் படம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் பேசுகையில், “'ஜனநாயகன்' தவெக-வை மட்டும் புகழ்ந்து பேசும் படமோ, வழக்கமான கமர்ஷியல் என்டர்டெய்னர் படமோ இல்லை. கதையின் மூலம் சமூகப் பொறுப்புள்ள, சிந்திக்க வைக்கும் அரசியல் கருத்துகளை முன்வைத்துள்ளோம். அக்கருத்துகள் ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். விஜய் சாரை கடைசியாக பெரிய திரையில் காண வேண்டும் என்ற ஆசையால் ரசிகர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வருவார்கள் என்று நம்புகிறேன். 'ஜனநாயகன்' சயின்ஸ் ஃபிக்ஷன் படம் அல்ல. இது நவீன போர் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம். நவீன போர்த் தொழில்நுட்பங்களின் பின்னணியில்தான் 'ஜனநாயகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய், அஜித் இருவருமே உயர்ந்த இடத்தில் இருக்க அவர்களின் மனிதாபிமானமே காரணம். படம் வெளியாவதில் சிக்கல் வந்தால், இதனால் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படும் என்றே அவர்கள் யோசிப்பார்கள். கவலைப்படாதீர்கள், சரியாகிவிடும் என அவர்கள் போனில் தரும் ஆறுதல் குடும்ப உறுப்பினர்களின் அக்கறையைக் காட்டுகிறது” என்றார்.

