”சாதிதான் காரணம்... என்னையும் கொன்னுடுவேனு மிரட்டுறாங்க”- கணவரை இழந்த பெண் கதறல்
எனது கணவர் கொலைக்கு காரணம் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என காதல் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி பேட்டியளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24) பால் கரவை தொழில் செய்து வருகிறார். கணபதி பட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவர் மகள் ஆர்த்தி என்பவர் உடன் காதல் மலர்ந்திருக்கிறது. கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ராமச்சந்திரன் மீது சந்திரன் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். மாதங்கள் கடந்ததால் பிரச்சனை இன்றி காதல் தம்பதிகள் சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வழிமறித்த சந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை அறிவாளால் சரி மாறியாக வெட்டியுள்ளார். கை துண்டான நிலையில் படு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பாலத்திலேயே சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்வு இடத்திற்கு வந்த நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரபிரபா ஆகியோர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக மகளைக் காதலித்து திருமணம் செய்த இளைஞரை படுகொலை செய்த சந்திரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். காதல் திருமண தகராறில் 5 மாதங்கள் காத்திருந்து நடத்தப்பட்ட படுகொலை தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் முடித்த இளைஞரை வெட்டி படுகொலை தொடர்பாக சாதாரண கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து காவல்துறையிடம் விசாரித்த போது காதல் திருமணம் முடித்த இளைஞரும் பெண்ணும் வெவ்வேறு சமூகம் என்றாலும் பிசி கம்யூனிட்டி பிரிவை சேர்ந்தவர்கள். ஆகையால் ஆணவ படுகொலை என் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் சாதாரண கொலை வழக்காக பதிவு செய்துள்ளதாக தெரிவித்ததோடு எஸ்சி எஸ்டி பட்டியலின பிரிவை சேர்ந்தவளாக இருந்தால் ஆணவ படுகொலையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் கணவனை இழந்து பாதிக்கப்பட்ட பெண் ஆர்த்தி கூறும்போது,"மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்தோம். எங்களை மீறி திருமணம் செய்தால் அவனையும் உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்கள். வீட்டின் எதிர்ப்பையும் மீறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டோம். அப்போது இருந்து என்னுடைய அப்பாவும், அண்ணனும் நீங்கள் எப்படி நிம்மதியாக இருக்கப் போகிறீர்கள்? என்று பார்த்து விடுகிறேன் என்று சொல்லி அடிக்கடி மிரட்டினர். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு நேரில் வந்த என்னுடைய அப்பா உங்கள் இருவரையும் சும்மா விட மாட்டேன் என்று மிரட்டியும் சென்றார். அப்போதே நான் உங்களுடன் வந்து விடுகிறேன் என் கணவரை ஒன்றும் செய்ய விரும்ப விடாதீர்கள் என்று கெஞ்சினேன் அவர் உங்களை விட மாட்டேன் என்று சொல்லி சென்று விட்டார்.
இந்த நிலையில் தான் நேற்று அதிகாலையில் என்னுடைய கணவரை கொலை செய்து விட்டார். அதேபோல் எனது அண்ணனும், அம்மாவும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்கள். என்னையும் கொலை செய்து விடுவேன் என எனது அண்ணன் பேசி உள்ளான். இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யும் வரை இறந்து போன ராமச்சந்திரன் உடலை வாங்க மாட்டோம்” என்றார்.


