சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்ததில் என்ன தவறு?- திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் அதிமுக மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய மக்கள் பணிகள் குறித்தும் கழக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுகவின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் கூடி தற்காலிக முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் இருக்கட்டும் என்று கூறினோம். அதன் பின்பு சசிகலா நான் முதலமைச்சராகிறேன். அதற்கான வேலைகளை எல்லாம் பார்க்கும்படி எங்களிடம் கூறினார். இந்நிலையில் தெய்வம் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்கு கர்நாடக நீதிபதி சசிகலாவை சிறையில் அடைத்தார். அப்பொழுது யாரை முதலமைச்சராக்கலாம் என்ற நிலையில் ஓ. பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கியவர் டிடிவி தினகரன். துரோகம் செய்தவர் அவர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார் எனக் கூறுகிறார்.

முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என நினைத்தவர் சசிகலா. நீதிமன்றம் வழங்கி தண்டனை காரணமாக அவரால் பதவி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக தேர்ந்தெடுத்தது முதலமைச்சராகினோம். வயதில் மூத்த சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்ததில் என்ன தப்பு உள்ளது? ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து வயதில் மூத்தவர்களிடம் காலில் விழுந்தார் எடப்பாடி பழனிசாமி இதில் என்ன தப்பு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.


