"தமிழ்நாட்டை ஆளப்போவது கவுண்டர் தான்.."- சர்ச்சையை கூட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

 
s

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் சாதி பெயரை சொல்லி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதி மத ரீதியாக வாக்கு கேட்பது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

2026 சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். மாநகர் பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ள அவர் தற்போது கிராமப்புற பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் இன்று திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் காப்புளியம்பட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். ஒக்கலிங்க கவுண்டர் இன மக்கள் அதிகம் வசிக்கும் காப்பிலியப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

பிரச்சாரத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்,“நீங்கள் எல்லாம் ஒக்கலிக கவுண்டர்கள். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு வேளாளர் கவுண்டர். எனவே கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆக போகிறார்” என பேசினார். தேர்தல் ஆணைய விதிகளின்படி சாதி மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பது குற்றம் என்ற விதி இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் சாதிப் பெயரைச் சொல்லி திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தேர்தல் ஆணைய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் திண்டுக்கல் சீனிவாசன் மீது இருக்கும் நிலையில், தற்போது சாதி பெயரைச் சொல்லி அவர் வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது