செங்கோட்டையனின் நிலை யாருக்கும் வரக்கூடாது - திண்டுக்கல் சீனிவாசன்

 
z z

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேமுதிகவின் கோரிக்கை தொடர்பாக மாநில அளவில் முடிவெடுக்க முடியவில்லை என்பதால் தேசிய தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும் என அதிமுக, மாநில பாஜக எதிர்பார்க்கிறது. தேமுதிகவை பாஜக அழைத்தாலும், அதிமுக அழைத்தாலும் கூட்டணி எங்களுடன் தான். கூட்டணி முடிவு அதிமுகவிற்கு சாதகமாக அமையும். கூட்டணிக்கு தலைமை ஈபிஎஸ் தான் என அமித்ஷா கூறியுள்ளார்.

எங்களுடன் இருந்த செங்கோட்டையன் இவ்வளவு கீழ்தரமாக சென்றுவிட்டார். எங்களிடம் முதலிடத்தில் இருந்தார். ஆனால் அங்கோ 4-வது, 5வது இடத்தில்தான் அமரவைக்கிறார்கள். எங்களுக்கு ஒரு தகுதி, செங்கோட்டையனுக்கு ஒரு தகுதி உள்ளது. விஜயை புரட்சித் தளபதி என செங்கோட்டையன் கூறுகிறார். செங்கோட்டையன் பேச்சை கேட்டு கண்ணீர்தான் விடனும். செங்கோட்டையன் பெரிய தாம்பூல தட்டில் அடித்தும் பயனில்லை. செங்கோட்டையனின் நிலை தாழ்ந்துவிட்டதை கண்டு கண்ணீர் வடிக்கின்றோம். அவரது நிலை யாருக்கும் வரக்கூடாது.” என விமர்சித்தார்.