செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - தினகரன் அதிர்ச்சி

 
ttv

 பல்லடம் செய்தியாளர்  நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதலுக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் திரு.நேசபிரபு அவர்களை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

tn

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காகவே திரு.நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாக பலமுறை புகார் அளித்த பின்னரும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பெட்ரோல் பங்கில் வைத்து நேசபிரபு மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 திமுக ஆட்சிக்குவந்த பின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை போன்ற சட்டம், ஒழுங்கு பிரச்னைகளால், பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பில்லாத சூழலில் பணியாற்றி வருவதற்கு தற்போது நடந்திருக்கும் தாக்குதல் சம்பவம் கூடுதல் சாட்சியாக அமைந்திருக்கிறது.

tn

 எனவே, உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனிமேலாவது சட்டம், ஒழுங்கு பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி, இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.நேசபிரபு அவர்களுக்கு அரசு சார்பில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். .என்று குறிப்பிட்டுள்ளார்.