கேஸ் மானிய பணம் வரலையா? என்ன பண்றது? போனிலேயே 2 நிமிடத்தில் செக் செய்வது எப்படி?
சிலிண்டர் மானியப் பணம் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒருவேளை உங்களுக்கு மானியம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா..?
வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்கான மானியத் தொகை, தகுதியுள்ள நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBTL) திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கள் கணக்கில் மானியத் தொகை வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒருவேளை உங்களுக்கு மானியம் வரவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அதை சரிசெய்ய எளிய வழிகள் உள்ளன.
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
- முதலில் உங்கள் மொபைல் போனில் mylpg.in இணையதளத்தைத் திறக்க வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் (Homepage) இன்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் ஹெச்பி கேஸ் (HP Gas) ஆகிய மூன்று சிலிண்டர்களின் படங்களைக் காண்பீர்கள்.
- உங்களிடம் எந்த நிறுவனத்தின் சிலிண்டர் உள்ளதோ அந்த சிலிண்டரின் புகைப்படத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்த பக்கத்தில், மேல் மெனுவில் உள்ள 'Give Your Feedback Online' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன்பிறகு, கேட்டகிரியில் 'LPG' என்பதைத் தேர்ந்தெடுத்து 'Subsidy Related (PAHAL)' ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது அதில் 'Subsidy Not Received' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது 17 இலக்க எல்பிஜி ஐடியை உள்ளிட்டு சமர்ப்பிக்க (Submit) வேண்டும்.
- இதன் மூலம், உங்கள் அனைத்து சிலிண்டர் புக்கிங் மற்றும் மானிய விவரங்கள் அடங்கிய பட்டியல் திரையில் தோன்றும்.
- எந்தத் தேதியில் எவ்வளவு பணம் வந்தது, எப்போது வரவில்லை என்ற அனைத்து விவரங்களையும் அதில் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
மானியப் பணம் வராமல் இருப்பதற்கான காரணம் என்ன?
உங்கள் சிலிண்டர் மானிய நிலையில் "பணம் வரவில்லை" (Money hasn't arrived) என்று காட்டினால், கீழ்க்கண்ட நான்கு காரணங்களில் ஒன்று இருக்கலாம்:
e-KYC முடிக்காமல் இருப்பது: இதுவே மிகவும் பொதுவான காரணமாகும். கேஸ் ஏஜென்சியில் e-KYC சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால் உங்கள் மானியப் பணம் நிறுத்தப்படும்.
DBT மற்றும் ஆதார் இணைப்பு: மானியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்படும். எனவே, உங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருப்பதும், DBT (நேரடிப் பலன் பரிமாற்றம்) ஆக்டிவாக இருப்பதும் மிகவும் அவசியமாகும். DBT வசதி முடக்கப்பட்டிருந்தால் பணம் வராது.
பெயரில் தவறு: கேஸ் இணைப்பில் உள்ள பெயருக்கும், வங்கிக் கணக்கில் உள்ள பெயருக்கும் எழுத்துப்பிழை இருந்தால் கூட சிஸ்டம் பணத்தைத் தடுத்துவிடும்.
வங்கிக் கணக்கு முடக்கம்: மானியப் பணம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கு நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் இருந்தால் கணக்கு செயலற்ற நிலைக்கு (Inactive) சென்றுவிடும். இதனால் அதில் மானியப் பணம் வரவு வைக்கப்படாது.
பணம் வராவிட்டால் எங்கே புகார் செய்வது?
உங்களுடைய சிலிண்டர் இணைப்பில் e-KYC, ஆதார் இணைப்பு, DBT என அனைத்தும் சரியாக இருந்தும் பணம் வரவில்லை என்றால், நேரடியாக நிறுவனத்தின் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
- இன்டேன் - 18002333555
- பாரத் கேஸ் - 1800224344
- ஹெச்பி கேஸ் - 18002333555
இந்த எண்களைத் தொடர்புகொண்டு உங்கள் எல்பிஜி ஐடியைக் கூறினால் அவர்கள் உடனடியாக உங்கள் பிரச்சினையைச் சரிசெய்வார்கள். எனவே, சிலிண்டருக்கான மானியப் பணம் உங்களுக்கு வரவில்லை என்றால், தாமதிக்காமல் mylpg.in தளத்திற்குச் சென்று இவ்வாறு சரிபார்க்கலாம்.

