பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தில் இதை கவனித்தீர்களா..?
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதம் வெளியாகியுள்ளது.
பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபிக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில், ”பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பினால் ஈர்க்கப்பட்டு, 6 வருடங்களுக்கு முன்பு நான் பாஜகவில் இணைந்தேன். அப்போது தமிழ்நாடு அரசியலில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வருவதும், அரசியல் போக்கை மேம்படுத்தவும் தான் என்னுடைய எண்ணங்களாக இருந்தன.
மிகக் குறிப்பாக அரசியல் என்பது வசதி படைத்தவர்களுக்கும், சில குறிப்பிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களும் என்பதை மாற்றி சாமானிய தனி மனிதனுக்கும் உரியது என்பதை கொண்டு வர விரும்பினேன்.
நெடுங்காலமாக பொதுவான அரசியலால் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மக்கள் சோர்வடைந்துள்ளனர். அந்த மாற்றம் என்பது பல்வேறு காலகட்டத்தில் வந்திருந்தாலும், களத்தில் நிற்காமல் மக்கள் நினைவில் இருந்து மறைந்தன.
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் நம் மக்களின் மொழியைப் பேசுவது இல்லை. நான் அதனை மாற்ற முயன்று, உள்ளேயும், வெளியில் இருந்து வந்த பல்வேறு தடங்கல்களை கடந்து நியாயமான வெற்றியை அடைந்தேன்.
ஒரு தேசியவாதியாக என் மொழியை மற்றும் கலாச்சாரத்தை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியா, அதன் பல்வேறு பிரிவு சமூகங்களின் வலிமை, கண்ணியம் மற்றும் ஊக்கம் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்டது என்பதை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆனால், கடந்த 18 மாதங்களாக மூத்த தலைவர்களுடன் மேற்கொண்ட பல கலந்துரையாடல்களில் எனக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தன என்பதை நான் நினைவுகூர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசியல் பாதைக்கான என்னுடைய சிந்தனைகள் மூலம் மூத்த அரசியல் தலைவர்களை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
அவர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின்னர், தமிழ்நாட்டைச் சார்ந்த என்னுடைய பார்வை, அவர்களுடன் ஒத்துப்போகவில்லை என்ற முடிவிற்கு வந்தேன்.அதனடிப்படையில், நீண்ட சிந்தனைக்குப் பின்னர், நான் அரசியலுக்கு வந்த நோக்கத்தை கடைப்பிடிக்க, கட்சியில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுத்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை விட்டு வெளியேறி, நான் அரசியலுக்கு வந்ததற்கான உண்மையான நோக்கம் என்ன என்பதை மறுபரிசீலனை செய்யவும், எதிர்காலத்தில் காற்று என்னை எத்திசை நோக்கி அழைத்துச் செல்கிறதோ அத்திசையில் பயணிக்கவும் இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். எனவே, கட்சியின் அனைத்துக் கட்டமைப்புப் பொறுப்புகளில் இருந்தும் என்னை உடனடியாக விடுவிக்குமாறும், பா.ஜ.க.வின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நான் அளிக்கும் இந்த ராஜினாமாவை உடனடியாக ஏற்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த புதிய இயக்கம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம் (APJ Abdul Kalam Centre for Ethics and Politics) இந்த புதிய இயக்கத்தின் ஒரு அங்கமாக இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப வல்லுநர்கள் (Technocrats) மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் எனப் பலதரப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் பண்பாட்டைத் தமிழ்நாட்டில் உருவாக்கவே இத்தகைய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மையத்தில் முறையாக பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வேளையில் லைவில் ஒருவர், ''உங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும்?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, ''பிரதமர் மோடி.. நம்முடைய பிரதமர் மோடி.. அந்த கவுரவம் இருக்கும். ஆனால் பாஜகவில் இருந்து ஒரு விஷயத்தை Disagree செய்கிறோம் என்றால் அதனை கம்பீரமாக மேற்கொள்வோம். மும்மொழி கொள்கை 'டைம் டேபிளில்' சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 2029ம் ஆண்டில் தான் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை என்றனர். அதற்காக நான் குரல் கொடுத்தேன். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எதிர்ப்பதற்காகவே நம்முடைய அரசியல் கிடையாது.
எப்படி திமுகவை பார்க்கிறோமோ, அதிமுகவை பார்க்கிறோமோ, எப்படி தவெகவை பார்க்கிறோமோ, எப்படி அண்ணன் சீமானை பார்க்கிறோமோ, அன்புமணி, ஜிகே வாசன், ஏசி சண்முகம், பாரி வேந்தர், ஜான்பாண்டியன், பிரேமலதா, கிருஷ்ணசாமி, வைகோ உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களை பார்க்கிறோமோ பாஜகவையும் அப்படித்தான் பார்ப்பேன். அதற்காக வன்மம் எதுவும் கிடையாது. அவர்களது கட்சியின் கொள்கையை அவர்கள் முன்னிறுத்த போகிறார்கள். நம்முடைய இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்த போகிறோம். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. தரம் பார்த்து மக்கள் நம்மை தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் நிற்கிறோம்'' என்றார்.
இதன்மூலம் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் பாஜகவை எதிர்க்க அண்ணாமலை தயாராகிவிட்டதாகவும், வரும் காலத்தில் திமுக, அதிமுகவை போல் பாஜகவையும் அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கான சமிக்ஞையை கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

