பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் இதை கவனிச்சீங்களா?

 
1

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை 3 சதவீதம் வரையிலான சலுகை விலை மூலம் இந்திய அரசு விற்பனை செய்ய முன்வந்துள்ளது.இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.இந்த கடிதத்தில் முதலமைச்சர் விஜய், 'இந்திய அரசு' என்ற பதத்தை பயன்படுத்தியதுதான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.அப்போது முதலாக, மத்திய அரசுக்கு பல முறை வெவ்வேறு விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதினார்.

குறிப்பாக, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பது, நீட் தேர்வை ரத்து செய்வது, பருத்தி இறக்குமதி வரியை நீக்குவது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது, உரங்களை தட்டுப்பாடின்றி வழங்குவது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த அனைத்து கடிதங்களிலும் மத்திய அரசை, முதலமைச்சர் விஜய் 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிட்டு வந்தார். 'ஒன்றிய அரசு' என்பது திமுகவினர் தொடர்ந்து பயன்படுத்தி வந்த பதம் ஆகும்.

ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், 'இந்திய ஒன்றியம்' என்பதை நினைவுப்படுத்தும் விதமாகவே ஒன்றிய அரசு என தாங்கள் குறிப்பிடுவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தவெக ஆட்சிக்கு வந்த பிறகும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே விஜய் குறிப்பிட்டு வந்தார்.

இந்நிலையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் இன்று எழுதிய கடிதத்தில், "தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாம் உளப்பூர்வமாக நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ஒன்றிய அரசு என்பதை இந்திய அரசு என மாற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளதை, தற்போது பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், "மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபடமாட்டோம்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், இன்றைய கடிதத்தில் பாஜகவினருக்கு விருப்பமில்லாத ஒன்றிய அரசு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, இந்திய அரசு என முதலமைச்சர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.