உங்கள் போனுக்கு இந்த மெசேஜ் வந்ததா? இனி ரீசார்ஜ் இல்லாட்டி இன்கம்மிங் கட்!
ரீசார்ஜ் செய்யாமல் வெறும் இன்கமிங் (Incoming) அழைப்புகளுக்காக மட்டும் ஜியோ (Jio) சிம் கார்டைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, ரீசார்ஜ் காலம் முடிந்த எண்களுக்கு இன்கமிங் அழைப்புகள் விரைவில் துண்டிக்கப்படலாம் என ஜியோ நிறுவனம் எச்சரிக்கை குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பத் தொடங்கியுள்ளது.
ரீசார்ஜ் திட்டம் இன்றி நீண்ட நாட்களாகச் செயல்பாட்டில் இருக்கும் எண்கள் மீதான விதிமுறைகளை ஜியோ நிறுவனம் கடுமையாக்கத் தொடங்கியுள்ளதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. தொழில்நுட்பத் தகவல்களை வெளியிடும் அபிஷேக் யாதவ் (@yabhishekhd) என்பவர் எக்ஸ் (X) தளத்தில் இந்தத் தகவலை முதலில் சுட்டிக்காட்டியுள்ளார். ரீசார்ஜ் காலம் முடிந்தவுடன் இன்கமிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளை ஜியோ நிறுத்த உள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கான ஆதாரமாக, பயனர்களுக்கு வந்துள்ள குறுஞ்செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். 'JB-JIOURG-S' என்ற முகவரியிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அந்தச் செய்தியில், "உங்களது ரீசார்ஜ் திட்டம் காலாவதியாகிவிட்டது; இன்கமிங் அழைப்புகள் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடையின்றித் தொடர்பில் இருக்க உடனடியாக ரீசார்ஜ் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஜியோ ரீசார்ஜ் பக்கத்திற்கான இணைப்பும் (Link) அதில் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் குறுஞ்செய்தியில் இன்கமிங் அழைப்புகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன; இன்கமிங் எஸ்எம்எஸ் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன், சேவை எப்போது நிறுத்தப்படும் என்பதற்கான காலக்கெடுவோ அல்லது நிச்சயம் நிறுத்தப்படும் என்ற உறுதியோ இன்றி 'நிறுத்தப்படலாம்' என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கை மாற்றம் குறித்து ஜியோ தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை ரீசார்ஜ் முடிந்த சுமார் ஒரு வாரத்திற்குள்ளேயே இன்கமிங் அழைப்புகளைத் துண்டித்துவிடும் நிலையில், ஜியோ நிறுவனம் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்குச் சலுகை அளித்து வந்தது. சிம் கார்டு பயன்பாட்டில் இருக்கும் வரை, ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் பல மாதங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை ஜியோ அனுமதித்து வந்தது.
இதன் காரணமாகவே, ரீசார்ஜ் செலவின்றி அழைப்புகளையும், வங்கி ஓடிபி (OTP) தகவல்களையும் பெறுவதற்கான இரண்டாவது சிம் கார்டாக (Secondary SIM) பலரும் ஜியோவைத் தேர்வு செய்திருந்தனர். தற்போது ரீசார்ஜ் முடிந்தவுடன் இன்கமிங் அழைப்புகளை ஜியோ துண்டிக்கத் தொடங்கினால், அந்தப் பயனர்கள் தங்கள் எண்ணைத் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க வழக்கமாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். நீண்ட நாட்களாக ரீசார்ஜ் செய்யப்படாமல் இருக்கும் சிம் கார்டுகளை ஜியோ நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்யத் தொடங்கியுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பல தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

