குதிரை பேரத்தை நாங்கள் உருவாக்கினோமா..?தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தி.மு.க. உருவாக்கியது - செங்கோட்டையன் அட்டாக்..!!

 
sengottaiyan

ஈரோடு மாவட்டம் கோபி, நல்லகவுண்டம்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது,

தமிழகத்தில் குதிரை பேரத்தை உருவாக்கியவர்களே தி.மு.க.,வினர் தான். கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனை, தி.மு.க., ராஜினாமா செய்ய வைத்தது. பின், தி.மு.க.,வில் இணைந்த அவருக்கு, தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர்.

அ.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க., சென்று, அங்கு அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இதையே தான் செய்தனர். வெறும் 96 பேரை வைத்துக்கொண்டு, 'மைனாரிட்டி' ஆட்சி நடத்தியவர்களுக்கு தான் அது தேவை; எங்களுக்கு தேவையில்லை. வேப்பனஹள்ளி, நாகர்கோவில் எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக, 50 கோடி ரூபாய் பேரம் பேசும் நிலை எதுவும் இல்லை. த.வெ.க., வலிமையாகவே ஆட்சி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கோவையில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், “த.வெ.க., அரசுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதால், அரசு அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகின்றன. ''கேரளத்துக்கு கனிம வளங்கள் எடுத்து செல்வதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

த.வெ.க., பெரும்பான்மையை பெற முயன்றபோது, தி.மு.க.,வுடன் இணைந்து முதல்வராக பழனிசாமி முயன்றது உண்மை.

''பதவிக்காக, எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என, பழனிசாமி நினைப்பதால், அங்கிருந்து, த.வெ.க.,வுக்கு வருகின்றனர்; இன்னும் பலர் வருவர்,” என்றார்.