இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி எளிதா?
2026 தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, தவெக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.
மதுராந்தகம் தனித்தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் சுமார் 62 ஆயிரம் வாக்குகளும், திமுக வேட்பாளர் அமலு பொன்மலர் சுமார் 59 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர். இதனால் அதிமுக வெற்றி பெற்றாலும், தவெக மற்றும் திமுகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருப்பது தெரியவந்தது. தாராபுரத்திலும் அதிமுக வேட்பாளர் சத்யபாமா சுமார் 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி சுமார் 64 ஆயிரம் வாக்குகளையும், தவெக வேட்பாளர் கௌரி சித்ரா சுமார் 46 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். இதனால் தாராபுரத்தில் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி வலுவாக இருப்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருமே தற்போது தவெக சார்பில் இடைத்தேர்தலில் களமிறங்குவது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தொகுதியில் அறிமுகமான அவர்களின் தனிப்பட்ட செல்வாக்குடன் தவெகவின் வாக்குகளும் சேரும் என அக்கட்சி நம்புகிறது. ஆனால் திமுகவும் போட்டியிலிருந்து விலகவில்லை. மதுராந்தகத்தில் பரந்தாமனையும், தாராபுரத்தில் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக பெற்ற கணிசமான வாக்குகள் காரணமாக, இரண்டு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. ஒருபுறம் தவெக தனது முதல் இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக களமிறங்கியுள்ளது. மறுபுறம் அதிமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியையும், இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கையும் நம்பியுள்ளது. திமுகவும் தனது வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. எனவே, மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

