உண்மையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததா..? ரேவந்த் ரெட்டி விமர்சனம்..!

 
1

இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது குறித்து ஆதாரமே இல்லையே என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

40 உயிர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதல் என்பது உளவுத்துறையின் தோல்வி. மோடிக்கு எல்லாமே அரசியல், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகதான் எல்லாமே, எனவே மோடியின் சிந்தனை நாட்டுக்கு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் எல்லா விமர்சனங்களுக்கும் ஜெய்ஸ்ரீராம் என்று பதில் சொல்கிறார்கள். பாஜகவும், மோடியும் இல்லாமல் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை என்ன செய்துக்கொண்டிருந்தது? புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் மூலம் மோடிஜி அரசியல் ஆதாயம் தேட முயன்றார்.

பிரதமரிடம் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? புல்வாமா சம்பவம் ஏன் நடந்தது? ஏன் நடக்க அனுமதித்தீர்கள்? உள்நாட்டு பாதுகாப்புக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? IB, RAW போன்ற ஏஜென்சிகளை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை? இது உங்கள் தோல்வி.. உண்மையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததா என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. எனவே, உள்நாட்டு பாதுகாப்பு என்பது காங்கிரசின் பொறுப்பு. யாருடைய கையிலும் நாட்டை விட்டுச் செல்ல நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவரது விமர்சனத்திற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். “ஹைதராபாத்தில் கோகுல் சேட், மெக்கா மஸ்ஜித், தில்சுக்நகர், லும்பினி பார்க் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான காங்கிரஸ், தேசப் பாதுகாப்பு பற்றிப் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். தெலுங்கானா முதல்வர் மலிவான அரசியல் மைலேஜுக்காக இந்திய இராணுவத்தின் தியாகங்களை கேள்விக்குட்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை” என்று பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.