காவல்துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழப்பா? மதுரையில் பரபரப்பு

 
s

மதுரையில் காவல்துறையினர் தாக்கியதால் பூசாரி பரமசிவம் உயிரிழந்ததாக கூறப்பட்ட புகாருக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தார் என தகவல் வெளியானது. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம்  19-ஆம் தேதி  அழைத்துச் சென்ற  சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.  அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம்  மதுரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி  உயிரிழந்திருக்கிறார். காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இந்த புகாருக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பக்கத்துவீட்டினருடன் ஏற்பட்ட பிரச்னையில் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட பரமசிவம் ஜூலை 26-ல் வீட்டில் கீழே விழுந்ததால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டதாகவும், அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அதனை மறுத்துவெளியேறிய நிலையில் உடல்நிலை தீவிரமாக பாதித்து ஆக.16ல் உயிரிழந்ததாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே காவல்துறை தாக்கி உயிரிழந்ததாக பூசாரி பரமசிவத்தின் மனைவி, மகன்  குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்நிலைய சிசிடிவி காட்சிகளும் இல்லை என போலீசார் சொல்கிறார்கள் என்று பூசாரியின் மனைவி பேட்டியளித்துள்ளார். மேலும் பூசாரி பரமசிவத்தின் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.