கேமரா கண்ணாடியை போட்டுவந்து பேரவை நிகழ்வுகளை படம் பிடித்தாரா அமைச்சர்?
கேமரா உடன் கூடிய கண்ணாடி மூலம் பேரவை நிகழ்வுகளை படம் பிடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைக்குள் மொபைல் கொண்டு வரக் கூடாது. படம்பிடித்தல், ஒலிப்பதிவு செய்வது கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் விதிகள் ஒன்றே. மொபைல் பயன்பாட்டுக்கே கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், Meta Al கேமரா கிளாஸ் மூலம் அவை நிகழ்வுகளைப் படம் பிடிப்பது விதிமீறல் என சமூக வலைதளத்தில் தகவல் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பர்வேஸ், “நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடி தான். அதில் மெட்டா AI கேமரா இருப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. சாதாரண கண்ணாடி அணிந்து தான் பேரவைக்கு செல்கிறேன். இதில் கேமரா இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

