சட்டமன்றத்தில் மது அருந்திவிட்டு வந்தாரா முதல்வர்? பஞ்சாப் அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை!
மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமான நேற்று பஞ்சாபில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. தொடக்கத்தில் சுமூகமாக இருந்த விவாதம், காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா அவையில் மொபைல் பயன்படுத்தியதற்கு முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்தபோது சூடுபிடித்தது.
அப்போது பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா, கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் உடனடியாக ஆல்கோ-மீட்டர் (மது பரிசோதனை) மற்றும் ஊக்கமருந்து பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் நம் முதல்வர் மது அருந்திவிட்டு சட்டப்பேரவைக்கு வந்துள்ளார் என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து , மதுபானப் பரிசோதனை கோரிக்கையை பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் நிராகரித்ததைத் தொடர்ந்து, அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்பால் சிங் கைரா தனது எக்ஸ் தளத்தில், “சட்டப்பேரவையில் முதல்வர் பகவந்த் மான் போதையில் இருந்தார். அவருக்கு மது போதை பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறி நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பகவந்த் மான் கூறுகையில், “எழுப்புவதற்கு அவர்களிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதால் இப்படி குற்றம்சாட்டுகிறார்கள்” என்றார்.

