ரஜினியை மிரட்டினாரா ஸ்டாலின்..? – தவெக ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் ரகுபதி கொடுத்த மரண அடி பதில்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அதாவது, திமுக மிரட்டியதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என குறிப்பிட்டிருந்தார். விஜய் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டார். அவர் தைரியமான தலைவர் என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு எதிர்ப்புகளை கிளப்பியது.
இந்த நிலையில், இதற்கு தற்போது அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, "நடிகர் ரஜினிகாந்தை யாரையும் மிரட்ட முடியாது எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. திமுக ரஜினிகாந்தை மிரட்டியாக கூறுவது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயம் தேடி விஜய் கட்சியினர் சொல்லி வருகின்றனர்.
எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களது நண்பர். 1996ல் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த நபர் ரஜினிகாந்த். அவரைப் பற்றி எந்த குறையும் திமுக சொல்லாது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமையலுக்கு எரிவாயுவையே கொடுக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை காப்பாற்ற போகிறாரா? அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். அமெரிக்காவினுடைய அடிமைகளாக நம்மளையெல்லாம் வைத்திருக்கிறார். அதுதான் அவர் இந்த 11 ஆண்டு காலத்தில் செய்திருக்கிற மிகப்பெரிய சாதனை என்று சொல்ல முடியும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சொல்வதை தவிர வேற வேலையே கிடையாது அவங்களுக்கு. சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். எல்லா பேப்பர்லயும் பாருங்க ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன கலாட்டாக்கள் நடக்குது, என்னென்ன பிரச்சனைகள் நடக்குது, என்ன அடிதடி சண்டைகள் நடக்குது, என்ன கலவரங்கள் நடக்குது என்பதெல்லாம் தினசரி பேப்பர்கள்ல வருகிறது. தமிழ்நாட்டுல அதில் ஒரு பங்கு வந்தா பெரிய விஷயம். எனவே தமிழ்நாட்டில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது.
மானாமதுரை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் யார் தவறு செய்தாலும் யாரையுமே எங்களுடைய முதலமைச்சர் காப்பாற்ற மாட்டார். சிபிசிஐடி விசாரணையில் உண்மை தெரியும். லாக்-அப் மரணங்களைப் பற்றி அதிமுக பேசவே முடியாது. அதிமுக ஆட்சியில் தினசரி எத்தனை நடந்துச்சுன்னு யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு லாக்-அப் மரணங்கள் எல்லாம் நடந்திருக்கு. அதனால் லாக்-அப் மரணங்கள் அதிமுக ஆட்சியில் கிடையாது, திமுக ஆட்சியில்தான் 27 அப்படின்னு சொன்னா அதை விட அப்பட்டமான பொய் வேற எதுவும் இருக்க முடியாது.
எங்களைப் பொறுத்தவரை லாக்-அப் மரணம்னா அதுக்கு விசாரிச்சு உரிய தண்டனை நடவடிக்கை எடுக்கப் போறோம். தண்டனை கொடுக்கப் போறோம். நாங்க யாரையும் அடித்துக் கொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. அவங்களுக்குத்தான் அதெல்லாம். அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆனால் இந்தியா என்று எடுத்துக்கொணண்டால் இங்கே இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கக்கூடிய மாநிலம், பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். அதுக்காக எந்தச் சம்பவமுமே நடக்கலைன்னு சொல்ல முடியாது. எஃப்.ஐ.ஆர் போட்டுக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இன்றைக்குச் சிறப்பான மாநிலம், பாதுகாப்பான மாநிலம்.
என்டிஏ கூட்டணியை பார்த்து எங்களுக்கு என்ன பயம். அவர்கள் தான் பயந்து ஒவ்வொருவர் காலில் விழுந்து எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று கெஞ்சி வருகின்றனர். எங்களுக்கு பயமில்லை நாங்கள் ஜில்லென்று போகி வருகிறோம். 2026 இல் நாங்கள்தான் வெற்றியடைய போகிறோம் அது தெரிந்து விட்டது. அது அவர்களுக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான் இன்னும் இழுத்துக் கொண்டு இருக்கின்றனர். தொகுதி உடன்பாட்டை கூட அவர்களால் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். என்டிஏவில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும் இன்றைய திமுக கூட்டணியை தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார்.

