"நான் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினேனா..? இல்லவே இல்லை.. அது வெறும் வதந்தி - மௌனம் கலைத்த தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்!
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்து, தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், என்னை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுகவினர் வதந்திகளைப் பரப்புகின்றனர். என் மீதும் தவெக ஆட்சி மீதும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் ரவுண்டானா அருகே கடந்த திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் முறையான கட்டமைப்பில் இல்லை.
அதிகாரிகள் மீது பெரிய மரியாதையும், மதிப்பும் எனக்கு இருக்கிறது. அதுமாதிரியான செயல் எதுவும் நான் செய்யவில்லை. ஏன் இப்படி தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை
என் மீதும் எங்கள் கட்சி மீதும் வன்மம் அதிகம் இருக்கிறது. இதனால் அவதூறு நோக்கில் தவறான செய்தி பரப்புகின்றனர். ஆனால் மக்கள் இப்போதும் எங்கள்கூடத்தான் இருக்கின்றனர். இது தவெகவின் ஆட்சி. கண்டிப்பாக ஒருபோதும் நாங்கள் அதுமாதிரி தவறு செய்யமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

