மலேசிய பிரதமரை சந்திக்க மறுத்தாரா முதல்வர் விஜய்?
தன்னுடனான சந்திப்பை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என பரவிய தகவலை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மற்றும் அவருடன் வந்த முதலீட்டாளர்கள் கேரளா சென்று அம்மாநில முதல்வர் சதீஷனை சந்தித்ததுடன் கேரள மாநிலத்தில் முதலீடுகள் செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனையும் நடத்தியுள்ளனர். முன்னதாக மலேசிய பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து முதல்வர் விஜய் மற்றும் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் முதல்வர் விஜய் தனது லண்டன் பயணத்தை தள்ளி வைக்க முடியாது என சொல்லிவிட்டதால் தற்பொழுது கேரளா மாநிலத்திற்கு மலேசிய பிரதமர் சென்று இருக்கிறார். கூடவே முதலீடுகளும் கேரளா பக்கம் சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், “கொள்கைகள், நற்பண்புகள் மற்றும் நல்லாட்சிக்கான ஒரு புதிய, நியாயமான குரலாக CM விஜய்யின் ஆட்சியை பார்க்கிறேன். அதே சமயம் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதும் எனக்கு தெரியும். ஏனென்றால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய பல்வேறு சக்திகள் எதிரில் உள்ளன. ஆட்சியின் தொடக்கம் நன்றாகவே அமைந்துள்ளது. ஆனால் அதை தொடர்ந்து அதே வேகத்துடன் தக்கவைத்து கொள்ள வேண்டும். தேதியை இறுதி செய்வதில் இரு தரப்பிலுமே சவால்கள் இருந்தன. கேரள பயணத்திற்கு பிறகு நான் மாலத்தீவு செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன். என்னிடம் குறுகிய நேரமே என்னிடம் இருந்தது. விஜய் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயமும் இருந்தது. அப்படியிருந்தும் சந்திப்பை ஒருங்கிணைக்க விஜய் பெருமுயற்சி செய்தார். துரதிருஷ்டவசமாக தேதி அமையவில்லை. அவர் விரைவில் மலேசியா வந்து நம்முடன் இணைவார் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

