"அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு" - பாமக கோரிக்கை!!

 
tn

அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

pmk

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்தடுத்து 3 போர்களில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, அவர்களை நடுங்க வைத்த வீரத்தின் விளைநிலம் கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாளில் அவருக்கு  வீர வணக்கம் செலுத்துவோம்; அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்! தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  அதற்கு வசதியாக தேசிய, மாநிலப் பாடத் திட்டங்களில் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அந்த தீரனுக்கு  நமது வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம்! மாபெரும் வீரராக அறியப்பட்ட திப்பு சுல்தானின் வெற்றிக்கு அனைத்து வகைகளிலும் உதவியாய் இருந்தவர் தீரன் சின்னமலை தான். தேசப்பற்றில் அவருக்கு இணை எவருமில்லை. அவரது பெருமைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம்; அவரது சிறப்புகளை போற்றுவோம்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு நினைவுகூர்ந்துள்ளார்.