பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழ்நாடு ஒப்புதல் தந்தது - தர்மேந்திர பிரதான்

 
பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழ்நாடு ஒப்புதல் தந்தது - தர்மேந்திர பிரதான்

தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ ஒப்புதல் தந்த கடிதத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். 

பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழ்நாடு ஒப்புதல் தந்தது என டிவிட்டரில் கடிதத்தை வெளியிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நேற்று நாடாளுமன்றத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் நிறுவுவதற்கான தமிழ்நாட்டின் ஒப்புதல் குறித்து நான் தவறான தகவலை தந்ததாக திமுக எம்பிக்கள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் குற்றஞ்சாட்டினார்கள். நான் நாடாளுமன்றத்தில் கூறிய பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்தது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மார்ச் 15  2024 தேதியிட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதல் கடிதத்தை இங்கே பகிர்கிறேன். முதல்வரும், திமுக எம்பிக்களும் பொய் குற்றச்சாட்டு கூறுகின்றனர். திமுக எம்.பி.க்களும் மாண்புமிகு முதல்வரும் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம், ஆனால் உண்மை சரியும்போது தட்டிக் கேட்பதில்லை. மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி, தமிழக மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டும். மொழிப் பிரச்சினையை திசைதிருப்பும் தந்திரமாகப் பேசுவதும், அவர்களின் வசதிக்கேற்ப உண்மைகளை மறுப்பதும் அவர்களின் ஆட்சியைக் காப்பாற்றாது. தேசிய கல்விக் கொள்கை மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? 


திமுகவின் இந்தப் பிற்போக்குத்தனமான அரசியல், தமிழகத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு பெரிய அவமானமாகும். தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களை விட தமிழ்நாட்டில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.