தருமபுரியில் பட்டாசு ஆலையில் தீ விபத்து.. 2 பெண்கள் பலி..

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகராசம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பழனியம்மாள் (70), முனியம்மாள் (50) உயிரிழந்தனர். சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிட்டங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பலத்த காயமடைந்த சிவசக்தி என்கிற பெண் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பட்டாசு குடோன்கள் உள்ளன. அதவகையில் அருகே நாகராசம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்று இயங்கி வருகிறது. சரவணன் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பட்டாசு கிடங்கில் இன்று காலை ( வியாழக்கிழமை ) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு குடோனில் வேலைக்கு வந்த 2 பெண்கள் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப்பணியை முடுக்கிவிட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்ததில் பட்டாசு குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பகுதிக்கு மக்கள் செல்லவேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.