"10-ல் 8 பேருக்குத் தமிழ் எழுத படிக்கத் தெரியவில்லை”- தனுஷ் வேதனை
10-ல் 8 பேருக்குத் தமிழ் எழுத படிக்கத் தெரியவில்லை என நடிகர் தனுஷ் வேதனை தெரிவித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு நடிகர் தனுஷ் தனது சொந்தச் செலவில் 3 தளங்கள் கொண்ட பிரம்மாண்ட கான்கிரீட் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். இதற்குப் பள்ளி நிர்வாகம் 'தனுஷ் பிளாக்' எனப் பெயரிட்டுள்ளது.இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் நடிகர் தனுஷ், அவரது பள்ளித் தோழரான ஒளிப்பதிவாளர் குமரன் மற்றும் 1999-ஆம் ஆண்டு படித்த சக மாணவர்கள் பலர் நேரில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “நாங்க எல்லாம் படிக்கிற காலத்தில் தப்பு தப்பா இங்கிலீஷ் பேசுவோம். ஆனா தமிழ் நல்லா தெரியும். இப்ப நான் பாக்கறேன். 10-ல 8 பேருக்கு தமிழ் எழுத படிக்கவே தெரியல. ஆனா, இங்கிலீஷ் பேசுறாங்க, எழுதுறாங்க. ரொம்ப வருத்தமான விஷயம் அது. உங்க தாய்மொழி தான் உங்களுக்கு முதல்ல தெரியணும். அதை எழுத, படிக்க தெரிஞ்சுக்கணும். `தமிழ் வரல'ன்னு சொல்றது பெருமை இல்லை. அது ஒரு அவமானம். நான் பெல்ஜியத்தில் ஒரு ஃபிரெஞ்சு படத்தில் நடித்தபோது ஆங்கிலம் தெரியுமா என கேட்டார்கள். நான் தெரியும் என சொன்னதும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள்? எனக் கேட்டதும், உங்கள் தாய் மொழி தானே உங்களுக்கு தெரிய வேண்டும்,ஆங்கிலம் உங்களுக்கு போனஸ் தானே என்றார்கள்” என்றார்.

