விஜய் பாணியில் தனுஷ் அதிரடி..!! ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்..!
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அதே பாணியில் தனுஷும் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியிருப்பதாலும், தொகுதி வாரியாக நிர்வாகிகளை வலுப்படுத்தி வருவதாலும், அவர் எதிர்காலத்தில் தீவிர அரசியலில் களம் இறங்குவதற்கான நடவடிக்கையாக இது இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.
நடிகர் தனுஷின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றங்கள் அனைத்தும், ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளன. புதிய அமைப்பின் பெயரான ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்பது ரசிகர்களின் நற்பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தனுஷின் ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருடைய அனைத்து ரசிகர் மன்றங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
நடிகர் தனுஷின் ரசிகர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் ரசிகர்கள் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் புதிய அமைப்பின் வாயிலாக அத்தகைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்போது இதன் முழுமையான செயல்திட்டம் தெரியவரும். இந்தப் பெயர் மாற்றம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக, கோவையில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்ற மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், தனுஷ் நற்பணி இயக்கத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய லோகோ மற்றும் சிவப்பு, வெள்ளை நிறத்திலான அதிகாரப்பூர்வ கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடியில் தனுஷின் உருவம் கைகூப்பி வணங்குவது போன்ற நிழற்பட வடிவம், ஒரு நட்சத்திரம் மற்றும் "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற அவரது தாரக மந்திரமும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில், நடிகர்கள் தங்களின் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, பின்னர் அரசியல் கட்சியாக அறிவிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சான்றாக பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய்யின் பாணியில் நடிகர் தனுஷும் தனது ரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றியுள்ளதால், எதிர்காலத்தில் அவர் அரசியலில் களமிறங்க திட்டமிடுகிறாரா என்ற பலத்த எதிர்பார்ப்பும் விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

