போலீஸார் மீதான ஊழல் புகாரை தெரிவிக்க தனிப்பிரிவு- டிஜிபி
தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன.
காவல் துறையினர் தொடர்பான லஞ்ச புகார்களை அளிக்க புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது இதன் முக்கிய நோக்கம். இதில் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், ஒழுங்கீனம் குறித்தும் புகார் அளிக்கலாம். ஊழலற்ற காவல் துறையை உறுதி செய்ய பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன. புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் என DGP/HoPF கேட்டுக்கொண்டுள்ளார்.

