அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தின் அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் துப்பாக்கியுடன் காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பிற்காக போட வேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வாசலில் மாயாண்டி என்ற இளைஞரை நேற்று முன்தினம் நான்கு பேர் சரமாரியாக வெட்டி கொன்றனர். இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தின் அருகில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிற காரணத்தினால் அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் கூடுதல் பாதுகாப்பு போட தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு உடன் உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக உதவி ஆய்வாளர்கள் பிஸ்டல் அல்லது ரிவால்வர் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், மற்ற காவலர்கள் நீண்ட ரேஞ்ச்கள் கொண்ட துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் பாதுகாப்பிற்கும் துப்பாக்கியை பயன்படுத்தி பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளும் இந்த உத்தரவை அமல்படுத்தி வருகிற 23ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமையகத்துக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்