கோவில் உண்டியலில் காணிக்கைக்கு பதில் மனு செலுத்திய பக்தர்கள்..!

 
1

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உண்டியலில் மூன்று பக்தர்கள் தங்கள் தேவைக்கேற்ப மனுக்கள் எழுதி போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஒரு பக்தர், குறைந்தபட்சம் ரூ.30,000 வேண்டும் என தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் ரூ.6 லட்சம் வேண்டும் எனக் கடவுளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம், நகைகள் உள்ளிட்டவை மாதந்தோறும் எண்ணப்படும். அந்த வகையில் வியாழக்கிழமை அன்று கோவில் ஆணையர் தலைமையில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது மூன்று பக்தர்கள் எழுதி இருந்த கோரிக்கை மனுக்கள் கிடைத்தன.

‘ஓம் முருகா துணை, ரூ.30,000 வேண்டும், விரைவாக தருக’ என்று ஒரு பக்தர் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர் தமக்கு ரூ.30 ஆயிரம் தேவைப்படுவதாகவும் மேலும் ஒருவர் தமக்கு ரூ.6 லட்சம் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

ரூ.6 லட்சம் வேண்டும் என்று வேண்டிக்கொண்டுள்ள பக்தர், எந்த வகையிலாவது தமக்கு பணத்தைத் தருமாறு கூறியுள்ளார்.

இதற்கிடையே, கடந்த மாதம் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தொகை ரூ.28.78 லட்சம் என்று கோவில் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் 117 கிராம் தங்க நகைகளும் 1.34 கிலோ வெள்ளி பொருள்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது என்றார் அவர்.