பெருமாள் கோயிலில் பக்தர்கள் விளக்கேற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு! சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயில் தீட்சிதர்களின் நிர்வாகத்தில் உள்ளது. இந்த கோயிலின் உள்ளே தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. பெருமாள் கோயிலுக்கு டிரஸ்டிகள் உள்ளனர். தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சைவ, வைணவ பாகுபாடு இருப்பதாகவும், அது களையப்பட வேண்டும் என்பதும் சிதம்பரம் தெய்வீக பக்தர்கள் பேரவையின் குற்றச்சாட்டாக உள்ளது. கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதுபோல் பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் மாற்றுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை கோரிய வழக்கு சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நடராஜர் கோயில் மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் சைவ, வைணவ ஒற்றுமை வலுப்பெற வேண்டி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் இன்று கோவிந்தராஜ பெருமாள் கோயில் சன்னதி எதிரில் 108 விளக்கேற்றி வழிபாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு துவக்கத்தில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனால் நடராஜர் கோயில் மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா தலைமையில் சுமார் 30 பேர் இன்று நடராஜர் கோயிலின் கீழ சன்னதியில் இருந்து கைகளில் அகல் விளக்குடன் கோயிலுக்குள் சென்றனர். பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க போலீசாரும் சென்றனர். சைவ, வைணவ ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கையில் பதாகைகளுடன், நடராஜர் கோயிலில் உள்ள பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட வேண்டும். பெருமாள் கோயில் கொடிமரத்தை புதுப்பிக்க தீட்சிதர்கள் அனுமதிக்க வேண்டும் என்கிற முழக்கங்களை எழுப்பியபடி அனைவரும் கோயிலுக்குள் சென்றனர். கோயிலின் உள்ளே சென்ற அவர்கள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு சென்று, சன்னதியின் எதிரே கொடிமரத்திற்கு அருகில் உள்ள கருடாழ்வார் சன்னதி முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த தெய்வீக பக்தர்கள் பேரவை அமைப்பினர், அங்கிருந்து நடராஜர் கோவிலுக்கும் சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனால் நடராஜர் கோயில் வளாகத்தில் காலை முதல் பரபரப்பு ஏற்பட்டது.