வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் கவனத்திற்கு: எதற்கெல்லாம் தடை? முழு விவரம்
வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றர். வரும் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கட்டாயமாக பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்தியாவசியத் தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஒரு பிளாஸ்டிக் பொருளுக்கு ரூ. 20 பக்தர்கள் செலுத்தி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் மீண்டும் மலையில் இருந்து இறங்கும்போது, அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் மலை அடிவாரத்தில் சோதனை தொடர்ந்து நடைபெறும். மல்டி லேயர் பிளாஸ்டிக், சாக்லெட், குறிப்பாக ஒரு ரூபாய் சாக்லெட்டுகள் என மொத்தமாக பக்தர்கள் வாங்கி வருகிறார்கள். அவர்களுக்கு சாக்லெட் கவர்களை பிரித்து, மொத்தமாக ஒப்படைத்துவிடுகிறோம். அந்தளவுக்கு மலை அடிவாரத்தில் நுழைவாயில் பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு தணிக்கை பணி நடைபெறுகிறது.
ஆறாவது மலையான ஆண்டிசுனையில் குளிக்கும் பக்தர்கள் ஆடைகளை அங்கேயே போட்டு விட்டு வராமல் இருக்கும் வகையில், விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மலைக்குச் செல்லும் பக்தர்கள் முடிந்த வரை, மலையை அதே நிலையில் தூய்மையாகப் பராமரிக்க வேண்டியது அனைவரின் கூட்டு பொறுப்பாகும். மலை மற்றும் மலையடிவாரத்தில் பறிமுதல் மற்றும் அப்புறப்படுத்தப்படும் துணி மற்றும் பிளாஸ்டிக் கடந்த ஆண்டு 28 டன் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 18 டன் ஆக இருந்தது.
போளுவாம்பட்டி வனச்சரகர் கூறுகையில், மலையில் எங்கும் வேம்பு, புங்கன், புளியமரக்கன்றுகள் உட்பட மரக்கன்றுகளை நடக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதேபோல, விதைப் பந்துகளை எடுத்துச் செல்லக் கூடாது. காட்டின் சூழலை மாற்றாமல் இருப்பதும், இந்த பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சில பக்தர்கள் கட்டுப்பாட்டை மீறி மரக்கன்றுகளை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக மருத்துவக்குழு 1 மற்றும் 3-வது மலைகளில் உள்ளனர். மலைகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் அனுமதிப்பதில்லை. முறுக்கு, மிக்சர் உள்ளிட்டவற்றை பாலித்தின் கவரில் வைத்து விற்பதும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் பாலித்தின் கவர்களை நொறுக்கு தீனிகள் விற்பதை தடுக்கும் வகையில், பாட்டில்கள் வசதி கடைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.


