பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணியை வழங்கி மோசடி: பக்தர்கள் அதிர்ச்சி..!

 
1 1

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
 

இந்நிலையில் 2014 முதல் 2025ம் ஆண்டு வரை, திருப்பதி கோவிலில் முக்கிய நபர்களுக்கு பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணி வழங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் தலைவர் பிஆர் நாயுடு, பட்டு சால்வைகள் குறித்து சந்தேகம் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவிலின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணையை துவக்கினர். அதில், முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட சால்வைகள், உண்மையில் 100 சதவீதம் பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவிலின் முக்கிய நிகழ்வுகளின் போது, முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தூய பட்டு சால்வைகளுக்கு பதில், விலைகுறைந்த பாலியஸ்டர் துணி வழங்கப்பட்டுள்ளது. பட்டு சால்வை எனக் கூறி வழங்கப்பட்ட துணி ஆய்வகங்களில் அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவை பாலியஸ்டர் துணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 

இது தொடர்பாக பிஆர் நாயுடு கூறியதாவது: 350 ரூபாய் மதிப்பிலான சால்வையை 1,300 ரூபாய் எனக்கூறி பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில் 50 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 2015 - 2025 ம் ஆண்டு வரை மோசடி நடந்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

குறிப்பிட்ட ஒரு நிறுவனம் மற்றும் அதனைச் சார்ந்த துணை நிறுவனம் மட்டுமே பட்டு சால்வைக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டது.