பக்தர்கள் ஷாக்..! காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை!

 
1

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவரின் பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. கோவில் பகுதியில் நூறு டிராக்டருக்கும் அதிகமாக மண் அள்ளப்பட்டதால் கோவில் கட்டடம் உறுதியிழந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து கோயிலை பாதுகாக்காக புனரமைப்பு பணிகளுக்காக அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவிடப்படவில்லை. ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது. எனவே கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் கோவில் புனரமைப்பு பணிகளின் தற்போதுள்ள நிலை குறித்து ஆய்வு செய்ய ஆணையரை நியமித்தும், புனரமைப்பு நிதியை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தபோது, திருப்பணிகள் 100% முடிவடைந்து விட்டது என தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த மனுவுக்கு அறநிலைய துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நம்பிராஜன் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் குறித்து ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.