பக்தர்கள் ஷாக்..!!இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு..!!

 
Q

இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர்.

பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (36 வயது) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த மணிக்குமார், குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார்.

உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் போராடி அவரை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.