கோவை வெள்ளயங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!

 
1

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது மே மாதம் பாதியை எட்டி உள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலரின் அறிவுரையின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து, மலைப் பாதைகளில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி மே 13-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்யத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

மலைப் பாதைகளில் மழைக் காலங்களில் வழுக்கும் தன்மையும், அபாயம் உள்ளதால், இந்தத் தடை உத்தரவை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை  எச்சரித்து உள்ளது. கோடைக்கால சீசன் முடிவுக்கு வந்து உள்ள நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிட்டு இருந்த பக்தர்கள் இடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கப்படுகிறது.