திருச்செந்தூரில் நாளை பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மார்ச் 3ஆம் தேதி நாளை பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் மார்ச் மூன்றாம் தேதி நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோவில் நடை திறப்பு மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது.
பொது தரிசன வரிசை, நூறு ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மாசி திருவிழாவில் 11 ஆம் நாள் திருவிழா என்பதால் சுவாமி பகல் 1.30 மணிக்கு மேல கோயிலில் இருந்து புறப்பட்டு பகல் 2 மணிக்குள் யாதவர் மண்டகப்படி சென்று அடைந்து பட்டு சாற்றி வைக்கப்படும். பின்னர் சந்திர கிரகணம் முடிந்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து தெப்ப மண்டபக்கப்படிக்கு புறப்பாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

