ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு, ரூ.66 லட்சத்தை திருப்பதிக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்

 
tirupati undiyal tirupati undiyal

திருப்பதியில் ஏழுமலையான் மீது உள்ள பக்தியால் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் மரணத்திற்குப் பிறகு ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு காணிக்கையாகவும், வங்கியில் உள்ள ரூ.66 லட்சம் நன்கொடையாக வழங்கி உயிலை தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது வீட்டை மரணத்திற்கு பிறகு தேவஸ்தானத்திற்கு ஒப்படைக்கும் உயில் மற்றும் தனது வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்ட ரூ.66 லட்சம் நன்கொடையாக வழங்கினார். தனது உயிலில் ஐதராபாத்தின் வனஸ்தலிபுரம் பகுதியில் உள்ள "ஆனந்த நிலையம்" என்ற பெயரில் கட்டப்பட்ட 3,500 சதுர அடி வீட்டை ஆன்மீக பயன்பாட்டிற்காக தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் ரூ.36 லட்சத்தை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கும், ஸ்ரீ வெங்கடேஸ்வர சர்வ ஸ்ரேயாஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத பரிரக்ஷன், ஸ்ரீ வெங்கடேஸ்வர கோ பரிரஷன் , ஸ்ரீ வெங்கடேஸ்வர வித்யாதானம், ஸ்ரீவாணி அறக்கட்டளைகளுக்கு தலா ரூ.6 லட்சம் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.

 

ஏழுமலையான் மீது முழு பக்தி கொண்ட பாஸ்கர் ராவ் சுவாமியின் சேவைக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க விரும்பினார். மரணத்திற்கு பிறகு அவரது கடைசி விருப்பத்தின்படி தேவஸ்தானத்திற்கு மாற்றப்படவிருந்த சொத்து பத்திரங்கள் மற்றும் காசோலைகளை ஏழுமலையான் கோயிலின் ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் இ.ஓ. வெங்கையா சௌத்திரியிடம் பாஸ்கர் ராவ் சொத்துகளின் அறங்காவலர்கள் எம். தேவராஜ் ரெட்டி, வி. சத்தியநாராயணா மற்றும் பி. லோகநாத் ஆகியோர் இணைந்து ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில், கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்திரி அறங்காவலர்களைப் பாராட்டி, இந்த உன்னத நோக்கத்தில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.