வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி

கோவை வெள்ளியங்கிரி மலையேறும் போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (42) மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரிகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டும் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத் துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். கோடை காலம் என்பதால், தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலையேறும் போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (42) மூச்சுத் திணறி உயிரிழந்தார். 6வது மலை அருகே இன்று அதிகாலை வரும் போது அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் ஊழியர்கள், உறவினர்கள் ரமேஷின் உடலை அடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீசார், ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.