வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கோவை வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு வந்த பொற்கொல்லர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (48). இவர் பொற்கொல்லராக பணியாற்றி வந்தார். மேலும் ஹரிதாஸ் தினமும் ராஜ வீதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையற்றத்திற்கு செல்ல தனது நண்பர் மாரியப்பன் என்பவருடன் நேற்று இரவு 11.30 மணி அளவில் வெள்ளிங்கிரி மலைக்கு வந்தார். பிறகு முதல் மலையில் ஏறிச்சென்ற போது திடீரென ஹரிதாஸுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வலிப்பு வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த அவரது நண்பர் சுமை தூக்கும் தொழிலாளிகள் உதவியுடன் அவரை கீழே தூக்கி வந்தனர்.
அப்போது அங்கிருந்த மருத்துவர் ஹரிதாஸை பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த ஆலாந்துறை போலீசார் ஹரிதாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு வந்த மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

