பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை - 8000 போலீசார் பாதுகாப்பு, போக்குவரத்து மாற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவையொட்டி, பசும்பொன் கிராமத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ள நிலையில் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், 1 டி.ஐ.ஜி., 20 எஸ்.பி.க்கள், 27 ஏ.டி.எஸ்.பி.க்கள் அடங்கிய 8,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு 150 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கமுதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
மதுரையில் இருந்து வரும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, சிவகங்கை, காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டிணம் வழியாக இராமநாதபுரத்திற்கு இயக்கப்படும், இராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இராமநாதபுரம், தேவிபட்டிணம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மாற்றுப்பாதையில் மதுரைக்கு இயக்கப்படும். மேலும் பார்த்திபனூர், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி பகுதிகளுக்குள் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் வர அனுமதி கிடையாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார்.


