தமிழகம் வரும் பிரதமர் மோடியை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பார்- உதயநிதி ஸ்டாலின்

மதுரை வரும் பிரதமரிடம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை பெறுவது தொடர்பாக நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வலியுறுத்துவார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி விலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், நம்ம School நம்ம ஊரு பள்ளி திட்டம் மூலம் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெர்டுஷா( Virutusa) அறக்கட்டளையின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பள்ளி கல்வி துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள தட்டச்சர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 பணியாளர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வஃக்பு வாரிய திருத்த சட்டம் தொடர்பாக தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம். பாம்பன் பாலம் திறக்க தமிழகம் வரும் பிரதமரிடம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பாக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வலியுறுத்துவார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். அதற்கு நியாயம் கேட்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது முதலமைச்சர் அலுவல் பணிக்காக ஊருக்கு செல்வதால் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரை சந்திக்கிறார்” என்றார்.