பாசிஸ்ட்டுகளின் சூழ்ச்சியை முறியடிப்போம் - உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது, மேலும் ஒரு தாக்குதலை பாசிஸ்ட்டுகள் நடத்தி இருக்கிறார்கள் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய மக்களின் உரிமைக்கும், விருப்பத்துக்கும் எதிராக வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை மக்களவையில் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தி.மு.கழகம் உட்பட 232 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்த நிலையிலும், 288 பேர் ஆதரவோடு இதனை ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கிறது. பெரும்பான்மை எண்ணிக்கை என்பது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே தவிர, மக்களின் உரிமைகளை பறிப்பதற்கும், வஞ்சிப்பதற்கும் இல்லை என்பதை பாசிஸ்ட்டுகளுக்கு புரிய வைப்போம்.
இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், “கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்” என்று நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு அறிவித்துள்ளார்கள். சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து தளங்களிலும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தின் பாதகங்களை எடுத்துச் செல்வோம். பாசிஸ்ட்டுகளின் சூழ்ச்சியை முறியடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.