காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது..!! நாளை புயலாக மாற வாய்ப்பு..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதால், தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று (அக்.22) காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (22ஆம் தேதி) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது நாளை (23ஆம் தேதி) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என்றும் , அக்.25ம் தேதி அதிகாலை பூரி கடற்கரை அருகே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டானா (DANA) என்கிறு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகி தமிழ்நாடு கடற்பகுதிகளை விட்டு விலகி வடமேற்கு திசையில் ஓடிசா மேற்குவங்கம் நோக்கி நகர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.