சென்னையை நோக்கி வரும் புயல் சின்னம்; நாளை கரையை கடக்கும் என தகவல்!

 
புயல் சின்னம்

நவம்பர் முதல் வாரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு சென்றது. சென்னையில் நவம்பர் 11ஆம் தேதி தான் மழை ஓய்ந்தது. ஆனால் நவம்பர் 13ஆம் தேதியே அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே வங்கக்கடலில் உருவானது. இது போதாதென்று அரபிக்கலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பீதியைக் கிளப்பியது. 

Image

இருப்பினும் வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதியே சென்னைக்கு அச்சுறுத்தலாக இருந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறாது  என்று நேற்று வரை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிவந்தது. ஆனால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் கொண்டது. தற்போதோ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் அறிகுறி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. நேற்று இரவு முதலே கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை நோக்கி வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தெற்கு ஆந்திரா-வட தமிழகம் அருகே கரையைக் கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.