தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்: அமைச்சர் ராஜ்மோகன்..!

 
1

தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட மின்னணு வருகைப் பதிவு முறை நீக்கப்பட்டு, இனி பழையபடி வருகை பதிவேடு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஆக.31) சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு காலையில் வழங்கப்படும் சிற்றுண்டிக்கு பதிலாக உணவுப்படி வழங்குவதற்கான கோப்பு அரசின் பரிந்துரையில் உள்ளதாகவும், அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் சார்பாக அவர்களை சந்தித்து, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேரவைக்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “தூய்மை பணியாளர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் அவர்கள் மீது பலபிரயோகம் செய்யக்கூடாது என காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போராடுவது அவர்களது உரிமை. அவர்கள் யாரும் எதிரி கிடையாது. போராட்டம் தொடர்பாக அரசு சார்பில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பணியின்பொழுது உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் ஞானகுமார், மாலா, பார்த்திபன், அருண் ராஜ் ஆகியோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை 93 உடை மாற்றும் அறைகளுடன் கூடிய கழிப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் 107 இடங்கள் கண்டறியப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தூய்மை பணியாளர்களுக்கான உடைமாற்றும் அறைகளுடன் கூடிய கழிப்பறை வசதிகள் எல்லா இடத்திலும் ஏற்படுத்தப்படும். 10.69 லட்சம் மாஸ்க், 1.18 லட்சம் கையுறைகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

உணவுக்கு பதிலாக உணவுப்படி வழங்குவதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. வெகு விரைவில் இது நிறைவேற்றப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கான சம்பளம் நாளொன்றுக்கு 762 ரூபாயாக இருந்த நிலையில், அதை 832 ரூபாயாக உயர்த்துவது தொடர்பாக சுமூகமான முடிவு எடுக்கப்படும். இரு ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நபருக்கு 4 சீருடை வழங்கப்படும். 450 புதிய பேட்டரி 3 சக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், டிஜிட்டல் வருகை புறப்பாடு பதிவுமுறைக்கு பதிலாக மீண்டும் வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருநாள் வார விடுமுறை, மகப்பேறு காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, இது தொடர்பாக துறை சாய்ந்த அதிகாரியுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.