எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு - செப்.19ம் தேதிக்கு ஒத்திவைப்பு..
திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார். தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது மத்திய சென்னை திமுக எம்.பி., தயாநிதி மாறனை விமர்சித்திருந்தார். அவர், ‘தயாநிதிமாறன் தனது தொகுதி மேம்பாட்டுக்கான நிதியில் 75% செலவு செய்யவில்லை; அப்படியானால் அவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை நீங்களே( மக்கள்)எண்ணிப்பாருங்கள்’என்று பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி தயாநிதிமாறன் எம்.பி., சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
பின்னர் இந்த வழக்கு சென்னை ஆர்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஜெயவேலு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக இபிஎஸ் பதிலளித்திருக்கிறார். இதனையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் ( செப்டம்பர்) 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.