ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

 
cyclone

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய  காற்றழுத்த தாழ்வு பகுதியானது  இன்று காலை ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து  மாலையில் காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக  வலுபெறற்றது. மேலும்  இது நாளை புயலாக வலுப்பெற்று  வடமேற்கு திசையில் நகர்ந்து 10.05.2022 அன்று மாலை  வட ஆந்திரா-ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு  மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில்  ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

 

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 09.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.