SIR-ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு- அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

 
ச் ச்

SIR நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் மாநில S.I.R. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், குறிப்பாக அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளிவராத காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளது ஏற்க இயலாதது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இந்த  S.I.R-க்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும்,   ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நமது அச்சத்துக்கு மிக முக்கியமான காரணம், பீகார் மாநிலத்தில் நடைபெற்றவை ஆகும். சிறுபான்மையினர் வாக்குகள், பா.ஜ.க.,வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு – தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு பீகார் மாநிலத்தில் இந்த நடவடிக்கையானது நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்தப் பதிலையும் மக்கள் மன்றத்துக்கோ, உச்சநீதிமன்றத்துக்கோ இந்தியத் தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. ஒன்றிய பா.ஜ.க.,வின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பீகாரில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் S.I.R திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 169-இன்படி  ஒன்றிய அரசின் அரசிதழில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமே வாக்காளர் பட்டியல் திருத்தம் S.I.R செய்யப்பட வேண்டும். அந்த முறையைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையமே அறிவிப்பைத் தன்னிச்சையாக வெளியிடுவது, அரசியல் சட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் எதிரானது. இப்போது செய்யப்பட்டுள்ள S.I.R அறிவிப்பே சட்டவிரோதமாகும். ஆதார் அட்டையை 12-ஆவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 27.10.2025 அறிவிப்பில் தெளிவற்ற முறையில் ஆதார் பற்றி குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சரிபார்ப்பில்  நேர்மைத்தன்மை இல்லை; வெளிப்படைத்தன்மை இல்லை.  அந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர்  பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. “ஆதார் சில நிபந்தனைகளுடன் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்பதே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடாக உள்ளது.  அதே அறிவிப்பில் “No document is to be collected from electors during the Enumeration Phase” என்று கூறப்பட்டுள்ளதும் வாக்காளர்களைக் குழப்பும் விதமாகவே அமைந்துள்ளது. ஒரு பக்கம் “எந்த ஆவணங்களையும் வாங்க கூடாது” என்று சொல்லி இருக்கிறார்கள்.

mkstalin


அதே அறிவிப்பின் இணைப்பு-III-இல் “வாக்காளர் பிறந்த தேதி தொடர்புடைய ஆவணங்களை வாக்குப் பதிவு அதிகாரிக்கு (ERO) அவர் கேட்கும் போது கொடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எப்போது கேட்பார்கள்?  தரப்படும் நோட்டீஸ் எந்த  படிவத்தில் யார் தருவார்?  எந்த படிவத்தில் ஆவணங்கள் தரப்பட வேண்டும்? ஆவணத்தைச் சமர்ப்பிக்க  எவ்வளவு நாட்கள் தரப்படும்? யாரிடம் தர வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடையில்லை. இது தேர்தல் ஆணையம் ஏற்படுத்தும் குழப்பத்தைக் காட்டுகிறது. இப்படி குழப்பி, உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது என்றே தெரிகிறது. ஒரு வாக்காளர் ஆவணம் வழங்க வேண்டுமா வேண்டாமா, யாரிடம் வழங்குவது என்ற எந்த அடிப்படை கேள்விகளுக்கும் உரிய பதில்களும் - விளக்கங்களும் இல்லை. இந்தக் குழப்பமானது   தகுதிபெற்ற வாக்காளர்களை நீக்கவே பயன்படும். தேர்தல் ஆணையத்தின் அவசரமே நமக்கு அதிக சந்தேகத்தை எழுப்புகிறது.

Enumeration காலம் என நிச்சயிக்கப்பட்டுள்ள 04.11.2025 முதல் 04.12.2025 வரையிலான காலம் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலம் ஆகும். இந்த காலத்தில் கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக -  விவசாயிகளாக இருப்பதால், Enumeration Form-களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற நியாயமான அச்சம் உள்ளது. வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும் . எனவே, இந்த காலம் Enumeration-க்கு உகந்த காலம் இல்லை என்று இக்கூட்டம் கருதுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் திருநாள் ஆகியவை இருக்கிறது. இதனால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களோ மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்று இக்கூட்டம் தனது அச்சத்தைப் பதிவு செய்ய விரும்புகிறது.

An elderly man with black hair, mustache, and glasses sits in a black chair wearing a white shirt, positioned in front of a purple and pink gradient background with a statue-like figure in sunglasses behind him.

வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி என்பது நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியம்; நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்மூச்சாகக் கருதப்படுகிறது.  அரசியல் சட்டமும் - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும் தேர்தல் ஆணையத்திற்கு இதற்காகவே  அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. நடுநிலைமையுடன், பாரபட்சமின்றி எந்த அரசியல் கட்சிக்கும் துணை போகாமல் சுதந்திரமான அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.  தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமகளத்தை (Level Playing Field) ஏற்படுத்திக் கொடுக்கும் மிக முக்கியமான கடமையைத் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் சட்டம் ஒப்படைத்துள்ளது.  ஆனால் பொறுப்புள்ள கடமையை நிறைவேற்ற வேண்டிய தேர்தல் ஆணையமே ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியின் சார்பாக நின்று செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறோம். உச்சநீதிமன்றத்தில் உள்ள S.I.R. வழக்கில் இறுதித் தீர்ப்பு வராத நிலையில், தனது 27-10-2025 அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நடத்துவதாக அறிவித்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமான,  தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு எதிரான செயலாகும். எனவே  இந்த S.I.R.  ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஆகவே இந்த S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் இப்போது கைவிடும்படி அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் S.I.R-ஐ நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இந்தக் கருத்துகளை ஏற்காததால், தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது எனவும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.