அழுகிய நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

 
குழந்தை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை அழுகிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக  மீட்பு

பள்ள சூரப்பட்டு கிராமத்தில் முட்புதரில் அழுகிய நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக கிராம மக்கள் சோழவரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர், பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர். நாய்கள் கடித்து குதறியதில் பச்சிளம் குழந்தையின் இடுப்பில் இருந்து கால் பகுதி வரை முற்றிலும் சிதைந்து விட்டது. 

தலை முதல் வயிறு வரையிலான பகுதி மட்டுமே ஈக்கள் மொய்த்தபடி இருந்தது. தொடர்ந்து பச்சிளம் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோழவரம் காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை பிறந்து ஒன்றிரண்டு நாட்களே ஆகி இருக்கலாம் என்பதால் அருகில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2 நாட்களில் நடைபெற்ற பிரசவங்கள் குறித்தும், அவர்களது விவரங்கள் குறித்தும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட உறவில் பிறந்த குழந்தை என்பதால் பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி சென்றனரா? அல்லது முன்விரோதம், குடும்ப தகராறில் குழந்தையை திருடி கொலை செய்து வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை அழுகிய சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.