செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி 8-ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் ஆகிய 5-பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். மேலும் கவலைக்கிடமான நிலையில் மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியை சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்நிலையில் இன்று முத்து, தம்பு, சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மிகவும் கவலைக்கிடமான நிலையில், அஞ்சலை மற்றும் அமாவாசை சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் அமாவாசை என்பவரே கள்ளச்சாராயம் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10-லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடதக்கது.